சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
பன்னிரெண்டாம் திருமுறை
முதற் காண்டம்
1. பாயிரம்
ஸ்ரீமத் நடராசர் துதி
1
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
1
மானிடப் பிறவியின் பயன்
2
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.
2
விநாயகர் வணக்கம்
3
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.
3
திருக்கூட்ட வாழ்த்து
4
மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.
4
அவையடக்கம்
5
அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.
5
6
தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்.
6
7
செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்.
7
8
மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை.
8
9
அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே.
9
நூற் பெயர்
10
இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

1. திருமலைச் சருக்கம்
1.1 திருமலைச் சிறப்பு
11
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்
மன்னிவாழ் கயிலைத் திரு மாமலை.
1
12
அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்
நண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும்
எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய
புண்ணியந் திரண்டு உள்ளது போல்வது.
2
13
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
3
14
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்.
4
15
பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம்.
5
16
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.
6
17
நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூயமால்வரைச் சோதியில் மூழ்கியொன்று
ஆய அன்னமும் காணா தயர்க்குமால்.
7
18
காதில் வெண்குழையோன் கழல் தொழ
    நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்
சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில்
    துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்று
    வெண்சுடர் ஆனது என்றதன் கீழ்
ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான்
    என்றதனை வந்தணைதரும் கலுழன்.
8
19
அரம்பையர் ஆடல் முழவுடன்
    மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க
வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ
    மது மலர் இருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமான சோபான
    நீடுயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
    பொலிவதத் திருமலைப் புறம்பு.
9
20
வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம்
    விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெருந்த் தடையாம்
    கதிர் மணிக் கோபுரத்துள்ளார்
பூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப்
    பொதுவில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில்
    நாயகன் நந்தி எம்பெருமான்.
10
21
நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர்
    நீறணி மேனியர் அநேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார்
    பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்
மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும்
    மலக்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான்
    காப்பதக் கயிலைமால் வரைதான்.
11
22
கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்
    கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும்
    அளப்பரும் பெருமையினாலும்
மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும்
    வென்றி வெண்குடை அநபாயன்
செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும்
    திருக்கயிலாய நீள்சிலம்பு.
12
23
அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்றறியாச் சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்னாரும் சீர் உபமன் னிய முனி.
13
24
யாதவன் துவரைக்கிறை யாகிய
மாதவன் முடிமேல் அடி வைத்தவன்
பூதநாதன் பொருவருந் தொண்டினுக்கு
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்.
14
25
அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தராய முனிவர் பல்லாயிரவர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி.
15
26
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
16
27
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என.
17
28
கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்.
18
29
"சம்புவின் அடித் தாமரைப் போதலால்
எம்பிரான் இறைஞ்சாயிஃதென்" எனத்
"தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன்
நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்".
19
30
என்றுகூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளியார் செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பும் நசையினோம்
இன்றெமக்குரை செய்து அருள் என்றலும்.
20
31
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
21
32
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு
இன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத்
துன்னினான் நந்தவனச் சூழலில்.
22
33
அங்கு முன்னரே ஆளுடை நாயகி
கொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
23
34
அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருள் என.
24
35
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப்
போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.
25
36
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வன
பன் மலர் கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின்.
26
37
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
'மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றி அம் மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய்' என.
27
38
கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்
'செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி
ஐயனே தடுத்தாண்டருள் செய்' என.
28
39
அங்கணாளன் அதற்கருள் செய்த பின்
நங்கை மாருடன் நம்பிமற்றத் திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்று
அங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன்.
29
40
அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்
"பந்த மானிடப் பாற்படு தென்திசை
இந்த வான்திசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதெ"ன மாதவன்.
30
41
"பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று
ஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால்.
31
42
அத் திருப்பதியில் நமை ஆளுடை
மெய்த் தவக்கொடி காண விருப்புடன்
அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று
இத் திறம் பெறலாம் திசை எத்திசை.
32
43
பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்.
33
44
எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.
34
45
நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது.
35
46
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூசனைக்குப் பொருந்தும் இடம் பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை".
36
47
என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
இன்று என் ஆதரவால் இங்கியம்புகேன்.
37
48
மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம்
புற்று இடத்து எம்புராணர் அருளினால்
சொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப்
பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம்.
38
49
அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை
நம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி
புந்தி ஆரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.
39
50
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.
40
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

1.2 திருநாட்டுச் சிறப்பு
51
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி
நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன்.
1
52
ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
2
53
சையமால் வரை பயில் தலைமை சான்றது
செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது.
3
54
மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்
கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்
போலும் நான்முகனையும் பொன்னி மாநதி.
4
55
திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.
5
56
வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.
6
57
வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால்.
7
58
வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்
தேசுடைத் தெனினும் தெளிவில்லதே.
8
59
மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புதுமதுப் பொங்கிட
வாவியிற் பொலி நாடு வளம்தரக்
காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால்.
9
60
ஒண் துறைத் தலை மாமத கூடு போய்
மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.
10
61
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே.
11
62
உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.
12
63
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்.
13
64
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.
14
65
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
கரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம்.
15
66
கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
வியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.
16
67
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்.
17
68
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
18
69
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதிபடியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.
19
70
காவினிற் பயிலுங்களி வண்டினம்
வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழிலிற் கனி சாடுமால்.
20
71
சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம்.
21
72
பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம்.
22
73
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர்
விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.
23
74
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே.
24
75
வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.
25
76
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும்.
26
77
கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்.
27
78
நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.
28
79
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும்.
29
80
மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும்
செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும்.
30
81
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்.
31
82
பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும்.
32
83
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.
33
84
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும்.
34
85
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
பொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ.
35
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

1.3 திருநகரச் சிறப்பு
86
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்னு மாமலராள் வழி பட்டது
வன்னியாறு மதி பொதி செஞ் சடைச்
சென்னியார் திருவாரூர்த் திருநகர்.
1
87
வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்
கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே.
2
88
பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி எழுந்துள எங்கணும்.
3
89
மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன.
4
90
அங்குரைக்கென்ன அளவப் பதியிலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
பங்கினாள் திருச் சேடி பரவையாம்
மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை.
5
91
படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய்
நடந்த செந்தாமரை அடி நாறுமால்.
6
92
செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி அளறு புலர்த்துமால்.
7
93
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
8
94
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
வளத் தொடும் பலவாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
9
95
ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்குமால்
சீரணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழுமால்.
10
96
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர்.
11
97
நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து)
அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால்.
12
98
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான்
மன்னு சீர் அநபாயன் வழி முதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.
13
99
மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்ணிலாதன் மாண இயற்றினான்.
14
100
கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப்
பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்.
15
101
பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால்.
16
102
அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான்.
17
103
தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
சிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.
18
104
அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி
வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன்.
19
105
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்
பொங்கிய தானை சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான்.
20
106
பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி.
21
107
தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்
பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே.
22
108
அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே
உம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும்.
23
109
மற்றுது கண்டு மைந்தன் "வந்ததிங்கு அபாயம்" என்று
சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து
"பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்
செற்ற, என் செய்கேன்" என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான்.
24
110
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
"மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு)
உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன்" என்பான்.
25
111
"வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன்" என்று மைந்தன்
சிந்தை வெந் துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான்.
26
112
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி
முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.
27
113
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.
28
114
ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி
"ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது" என்று சொன்னார்.
29
115
மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
"என் இதற்குற்றது" என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.
30
116
"வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை" என்றான்.
31
117
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
வெவ்விடந் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்"கிங்கு
இவ் வினை விளைந்தவாறு" என்று இடருறும் இரங்கும் ஏங்கும்
"செவ்விது என் செங்கோல்!" என்னும் தெருமரும் தெளியும் தேறான்.
32
118
"மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்
என்னெறி நன்றால்" என்னும் "என்செய்தால் தீரும்" என்னும்
தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்
அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால்.
33
119
மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச்
"சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம்" என்றார்.
34
120
"வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ?
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச்
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமந் தான் சலியாதோ?"
35
121
மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?
36
122
"என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
மன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு" என்றான்.
37
123
என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
"நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்
பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலங் காவல!" என்றார்.
38
124
அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்
இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த
செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான்.
39
125
"அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால்
வெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது?" விளம்பீர்.
40
126
"போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்
ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்".
41
127
என மொழிந்து "மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
மனம் அழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்" என
அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்.
42
128
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
"முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க" என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்
தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான்.
43
129
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான்.
44
130
தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான்.
45
131
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்.
46
132
அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
47
133
அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அருந் துயரம் நீங்கினான் நிலவேந்தன்
மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே.
48
134
பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து
சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும்.
49
135
இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ?
அனைய தனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில்.
50
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

1.4 திருக்கூட்டச் சிறப்பு
136
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூதெயில் திரு வாயில் முன்னாயது.
1
137
பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உள்ளது
தேவா சிரியன் எனுந் திருக் காவணம்.
2
138
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது.
3
139
அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று
அகில லோகத்து உளார்கள் அடைதலின்
அகில லோகமும் போல்வத தனிடை.
4
140
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார்.
5
141
மாசிலாத மணி திகழ் மேனி மேல்
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எத் திசையும் விளங்கினார்
பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்.
6
142
பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
கோதிலாத குணப் பெருங் குன்றனார்.
7
143
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
8
144
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ?
9
145
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்
நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன்.
10
146
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

1.5 தடுத்தாட்கொண்ட புராணம்
147
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு.
1
148
பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்
திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே.
2
149
மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு)
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்
தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.
3
150
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்,
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில்.
4
151
நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்.
5
152
பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
அரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து
திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார்.
6
153
தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப
வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்
செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார்.
7
154
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்
நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்.
8
155
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்
பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக்
கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார்.
9
156
மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.
10
157
மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்
புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலராகி
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள்.
11
158
மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்
துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப்
புணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலே
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்புச் சேர்த்தார்.
12
159
மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்
தூ மறை மூதூர்க் கங்குல் மங்கலந் துன்றி ஆர்ப்பத்
தேமரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக்
காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்.
13
160
காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன
வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான்
நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்.
14
161
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப்
பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி பைம்பொன் திண்கால்
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்.
15
162
அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி
முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்.
16
163
தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்
பான் மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான்.
17
164
தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்
நாம நீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான்.
18
165
மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப்
பொன் அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.
19
166
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார்.
20
167
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றிச் சூதும்
பங்கய முகையும் சாயத்துப் பணைத்து எழுந் தணியில் மிக்க
குங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கைத் தாகி.
21
168
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்
இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிகளாலும்
நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும்
கருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே.
22
169
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்
பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங் கொடிகள் ஆட
அருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால்.
23
170
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்.
24
171
கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார்
பெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார்
மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள்.
25
172
"ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்" என்பார்
"தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது" என்பார்
"பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி" என்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார்.
26
173
வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்
திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்
பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும்
ஒரு மணத் திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.
27
174
ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த
சாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்
மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்.
28
175
கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ்
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத்
தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.
29
176
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க.
30
177
பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக்
கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள
வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத்
தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள.
31
178
மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி.
32
179
வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
"இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும்" என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்.
33
180
என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்
மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்
"நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று ஏ
நின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது" என்றார்.
34
181
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்
முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்.
35
182
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
"உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்
மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்
முற்ற இது சொல்லுக" என எல்லை முடிவு இல்லான்.
36
183
"ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது" என்றான்
தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான்.
37
184
என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்
நின்றார் இருந்தார் "இவன் என் நினைந்தான் கொல்" என்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான்
"நன்றால் மறையோன் மொழி" என்று எதிர் நோக்கி நக்கான்.
38
185
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று
"அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால்
இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட" என்ன.
39
186
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
"ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன்" என்றார்.
40
187
"பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்" என்றார்.
41
188
"கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன்" என்று
தொண்டனார் "ஓலை காட்டுக" என்றனர் துணைவனாரை.
42
189
"ஓலை காட்டு" என்று நம்பி உரைக்க "நீ ஓலை காணல்
பாலையோ அவை முன் காட்டப் பணிசெயற் பாலை" என்ற
வேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார்.
43
190
ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்
காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி
பூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்?
44
191
மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி
அறை கழல் அண்ணல் "ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை"S எனக் கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான்.
45
192
அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி "இந்தப்
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற
திரு மறை முனிவரே எங்குளீர் செப்பும்" என்றார்.
46
193
என்றலும் நின்ற ஐயர் "இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி
வன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை" என்றான்.
47
194
குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப்
பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க "வெண்ணெய் நல்லூராயேல் உன்
பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய்" என்றார்.
48
195
வேதியன் அதனைக் கேட்டு "வெண்ணெய் நல்லூரிலே நீ
போதினும் நன்று மற்றப் புனித நான்மறையோர் முன்னர்
ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்
சாதிப்பன்" என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான்.
49
196
செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
வல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத்தாரும் "இது என்னாம்" என்று செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி.
50
197
வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும் "நாவலூர் ஆரூரன் தன்
காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி
மூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு" என்றான்.
51
198
அந்தணர் அவையில் மிக்கார் "மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர்" என்றார்
வந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை
தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான்.
52
199
"இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?
தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சாரச் சொன்னான்
அசைவில் ஆரூரர் எண்ணம் என்" என்றார் அவையில்மிக்கார்.
53
200
"அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத்
தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன்" எண்ணம் மிக்கான்.
54
201
அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி
"இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற
வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும்" என்று உரைத்து மீண்டும்.
55
202
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன "முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
மாட்சியில் காட்ட வைத்தேன்" என்றனன் மாயை வல்லான்.
56
203
வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச்
செல்வ நான் மறையோய்! நாங்கள் தீங்குற ஒட்டோம் என்றார்
அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார்.
57
204
இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித்
தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்.
58
205
அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.
59
206
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
ஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர்
மாசிலா மறையோர் "ஐயா! மற்றுங்கள் பேரனார் தம்
தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின்" என்றார்.
60
207
அந்தணர் கூற "இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
தந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழிமின்" என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்.
61
208
திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
"இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் செயல் இல்லை" என்றார்.
62
209
"நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்
பான்மையின் ஏவல் செய்தல் கடன்" என்று பண்பில் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி "விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ" என்று நின்றார்.
63
210
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
"அருமுனி! நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியேயாகப் பேசியதுமக்கு இவ்வூரில்
வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக" என்றார்.
64
211
பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீராகில் 'போதும்' என்றுரைத்துச் சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.
65
212
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் "எங்கள்
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ" என்று நம்பி
தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோ(டு)
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்.
66
213
"முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம்" என்றார்.
67
214
என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்
துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக
"மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது" என்றார்.
68
215
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
விண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்.
69
216
"மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச்
சொற் தமிழ் பாடுக என்றார்" தூமறை பாடும் வாயார்.
70
217
தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் "பாடுவாய் நம்மை" என்ன
நாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று.
71
218
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட
கோதிலா அமுதே! இன்று உன் குணப் பெருங் கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்" என மொழிந்தார்.
72
219
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
"முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார் நின்ற
வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.
73
220
கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்
"பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்
இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.
74
221
முறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தள முதலில்
குறையா நிலை மும்மைப்பாடிக் கூடுங் கிழமை யினால்
நிறை பாணியின் இசை கோள்புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.
75
222
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றுறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்
எல்லா உலகும் உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
76
223
அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.
77
224
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்
மேவும் அருள்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின்
பூ அலரும் தடம் பொய்கைத் திருநாவலூர் புகுந்து
தேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார்.
78
225
சிவன் உறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத்
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று
பவ நெறிக்கு விலக்கு ஆகுந் திருப்பதிகம் பாடினார்.
79
226
புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள
அலர் கொண்ட நறுஞ் சோலைத் திருத் துறையூர் அமர்ந்து அருளும்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்
மலர் கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன் தொண்டர்.
80
227
திருத் துறையூர் தனைப் பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர்
நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனங் கொண்டார்.
81
228
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்
நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில்
செலவணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார்.
82
229
"உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து
அடையும் அதற்கு அஞ்சுவான்" என்று அந் நகரில் புகுதாதே
மடை வளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார்.
83
230
வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்
விரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள்
புரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற
பரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார்.
84
231
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
பொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல்
பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார்.
85
232
அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்
சென்னியில் வைத்தனை என்னத் திசை அறியா வகை செய்த(து)
என்னுடைய மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.
86
233
அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச்
செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி
இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார் என்னக்
கங்கை சடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான்.
87
234
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் எனத் தெளிந்து
தம்மானை அறியாத சதியார் உளரே என்(று)
அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த
கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார்.
88
235
பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும்
வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம் திளைத்தாடி.
89
236
அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப்
பொங்கு நதித் தென்கரை போய்ப் போர் வலித்தோள் மாவலி தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி அணைந்தார்.
90
237
பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
நரம்புடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி
அரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார்.
91
238
தேம் அலங்கல் அணி மாமணி மார்பின்
    செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண்
பூ மலங்க எதிர் பாய்வன மாடே
    புள்ளலம்பு திரை வெள் வளை வாவி
தா மலங்குகள் தடம் பணை சூழும்
    தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை
மா மலங்களற வீடு அருள் தில்லை
    மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி.
92
239
நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ்
    நாளிகேரம் இலவங்கம் நரந்தம்
பூக ஞாழல் குளிர் வாழை மதூகம்
    பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
மேக சாலமலி சோலைகள் ஆகி
    மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்
போக பூமியினும் மிக்கு விளங்கும்
    பூம்புறம்பணை கடந்து புகுந்தார்.
93
240
வன்னி கொன்றை வழை சண்பகம்
    ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை
    கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
துன்னு சாதி மரு மாலதி மௌவல்
    துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
பன் மலர்ப் புனித நந்தவனங்கள்
    பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.
94
241
இடம் மருங்கு தனி நாயகி காண
    ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
நடநவின்று அருள் சிலம்பொலி போற்றும்
    நான் மறைப் பதியை நாளும் வணங்க
கடல் வலங் கொள்வது போல்
    புடை சூழுங் காட்சி மேவிமிகு
சேட் செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர்
    இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார்.
95
242
மன்றுளாடு மதுவின் நசையாலே
    மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
    குண்ட கழக்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித்
    தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
சென்று சென்று முரல்கின்றன கண்டு
    சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்.
96
243
பார் விளங்க வளர் நான் மறை நாதம்
    பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
சீர் விளங்கு மணி நாவொலியாலும்
    திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்
தார் விளங்கு வரை மார்பின் அயன்
    பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லை
ஊர்விளங்கு திருவாயில்கள் நான்கின்
    உத்தரத் திசை வாயில் முன் எய்தி.
97
244
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர்
    அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ
முன் பிறைஞ்சினரி யாவர் என்று அறியா
    முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து
    பெருகு நாவல் நகரார் பெருமானும்
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும்
    பொருவிறந்த திருவீதி புகுந்தார்.
98
245
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே
    ஆடரம்பையர் அரங்கு முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்
    வாச மாலைகளில் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
    போற்றிசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும்
    தேவ தேவர் புரியும் திருவீதி.
99
246
போக நீடு நிதி மன்னவன் மன்னும்
    புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
மாகம் முன் பருகுகின்றன போலும்
    மாளிகைக் குலம் மிடைந்த பதாகை
யோக சிந்தை மறையோர்கள்
    வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
மேக பந்திகளின் மீதிடைஎங்கும்
    மின் நுடங்குவன என்ன விளங்கும்.
100
247
ஆடு தோகை புடை நாசிகள் தோறும்
    அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்
மாடுதாமமணி வாயில்கள் தோறும்
    மங்கலக் கலசம் வேதிகை தோறும்
சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும்
    செந்நெல் அன்னமலை சாலைகள் தோறும்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும்
    நிறைந்த தேவர் கணம் நீளிடை தோறும்.
101
248
எண்ணில் பேர் உலகு அனைத்தினும்
    உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன என்ன
    மங்கலம் பொலி வளத்தன ஆகிப்
புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு
    புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்
அண்ணல் ஆடு திருஅம்பலம் சூழ்ந்த
    அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.
102
249
மால் அயன் சதமகன் பெரும் தேவர்
    மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
சீல மாமுனிவர் சென்று முன் துன்னித்
    திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்
காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக்
    காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்
கோல நீடு திருவாயில் இறைஞ்சிக்
    குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார்.
103
250
பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை
    மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
வருமுறை வலம் கொண்டிறைஞ்சிய
    பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அருமறை முதலில் நடுவினில் கடையில்
    அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம்
    முன் திரு அணுக்கன் திரு வாயில்.
104
251
வையகம் பொலிய மறைச் சிலம்பு
    ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை
    அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
    கரணமோ கலந்த அன்புந்தச்
செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து
    எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு.
105
252
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள
    அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்
    திருந்து சாத்து விகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த
    எல்லையில் தனிப் பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
    மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
106
253
"தெண்ணிலா மலர்ந்த வேணியாய்
    உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
    வாலிதாம் இன்பம் ஆம்" என்று
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக்
    கைம்மலர் உச்சி மேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
    பாடினார் பரவினார் பணிந்தார்.
107
254
தடுத்து முன் ஆண்ட தொண்டனார்
    முன்பு தனிப் பெருந் தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் "தரளம்
    எறிபுனல் மறி திரைப் பொன்னி
மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில்
    வருக நம்பால்" என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்தது
    ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்.
108
255
ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த
    அப் பணி சென்னி மேற் கொண்டு
சூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு
    தொழுந் தொறும் புறவிடை கொண்டு
மாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை
    வலங் கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை
    போல் நிலை எழு கோபுரங் கடந்து.
109
256
நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து
    நெடுந் திருவீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூடேகி
    மன்னிய திருப்பதி அதனில்
தென்திசை வாயில் கடந்து முன்
    போந்து சேட்படுந் திரு எல்லை இறைஞ்சிக்
கொன்றை வார் சடையான் அருளையே
    நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.
110
257
புறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்
அறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்
பிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்
சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார்.
111
258
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்
கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள.
112
259
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்
தெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக்
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்று
பண்டரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்.
113
260
இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
வெருக் கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பிப்
பெருக்கோதம் சூழ்புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த்
திருக்கோலக்கா வணங்கி செந்தமிழ் மாலைகள் பாடி.
114
261
தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்
ஆனாப் பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி
மானார்க்கும் கரதலத்தார் மகிழ்த இடம் பல வணங்கிக்
கானார்க்கும் மலர்த் தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார்.
115
262
வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும்
பைம் பொன் வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்தாடி
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர்
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்.
116
263
மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன் தன் அருள் நினைந்து
பொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்
தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார்.
117
264
தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
"ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்" என்று
நீராரும் சடை முடிமேல் நிலவணிந்தார் அருள் செய்தார்.
118
265
தம்பிரான் அருள் செய்த திருத் தொண்டர் அது சாற்றி
"எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்
நம் பிரானார் ஆவார் அவரன்றே" எனும் நலத்தால்
உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார்.
119
266
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத்
தாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும்
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும்
ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார்.
120
267
சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக்
கோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பி
தாதிவர் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்து
வீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத்தெளித்தார்.
121
268
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச்
செங் கயற் கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயில
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
பொங்கெயில் நீள் திருவாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார்.
122
269
வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன்
    வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார்
    திருத் தொண்டர் தம்மை நோக்கி
"எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும்
சந்த இசைப் பதிகங்கள் பாடித் தம்
    பெருமான் திருவாயில் சார்ந்தார்.
123
270
வானுற நீள் திரு வாயில் நோக்கி
    மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித்
தேனுறை கற்பக வாசமாலைத்
    தேவாசிரியன் தொழுது இறைஞ்சி
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால்
    உச்சி குவித்த செங்கைகளோடும்
தூநறுங் கொன்றையான் மூலட்டானம்
    சூழ் திரு மாளிகை வாயில் புக்கார்.
124
271
புற்றிடங் கொண்ட புராதனனைப்
    பூங்கோயில் மேய பிரானையார்க்கும்
பற்று இடம் ஆய பரம் பொருளைப்
    பார்ப்பதி பாகனை பங்கயத்தாள்
அர்ச்சனை செய்ய அருள் புரிந்த
    அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால்
    நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
125
272
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய
    அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி
    முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி
    நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே
    இன்னிசை வண்டமிழ் மாலை பாட.
126
273
வாழிய மா மறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார் அருளாலோர் வாக்கு
"தோழமை ஆக உனக்கு நம்மைத்
    தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம்
    என்றும் புனைந்து நின் வேட்கை தீர
வாழி மண் மேல் விளையாடுவாய்" என்று
    ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே.
127
274
கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும்
    கேடு இலாதானை இறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே
    ஆரூர் அமர்ந்த அருமணியே
வாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா!
    மற்று உன் பெரிய கருணை அன்றே
நாட்கமலப் பதம் தந்தது இன்று
    நாயினேனை பொருளாக என்றார்.
128
275
என்று பல முறையால் வணங்கி
    எய்திய உள்ளக் களிப்பினொடும்
வென்றி அடல் விடைபோல் நடந்து
    வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து
    திருமாளிகை வலம் செய்து போந்தார்
அன்று முதல் அடியார்கள் எல்லாம்
    தம்பிரான் தோழர் என்றே அழைத்தார்.
129
276
மைவளர் கண்டர் அருளினாலே
    வண்டமிழ் நாவலர் தம் பெருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து
    சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய
    மிக்க விழுத்தவ வேந்தர் என்னத்
தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து
    மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்.
130
277
இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து
முதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்குப்
பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடிமாரில்
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள்.
131
278
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்
விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.
132
279
பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள்
விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்
"வர மலர் மங்கை இங்கு வந்தனள்" என்று சிந்தை
தர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவஞ் சேர்ந்தார்.
133
280
மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.
134
281
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்ன
பாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்
கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கையோர் குறிப்புத் தோன்ற.
135
282
பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி
அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம்
கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார்.
136
283
பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்
தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ
ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும்
பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாட் போந்தார்.
137
284
அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.
138
285
புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி
நற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய்
விற் புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரைக் கண்டார்.
139
286
கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ?
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்.
140
287
ஓவிய நான்முகன் எழுத
    ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தமுற
    விதித்ததொரு மணி விளக்கோ
மூவுலகின் பயனாகி முன்
    நின்றது என நினைந்து
நாவலர் காவலர் நின்றார்
    நடுநின்றார் படை மதனார்.
141
288
தண்டரள மணித் தோடும்
    தகைத்தோடும் கடை பிறழும்
கெண்டை நெடுங் கண் வியப்பப்
    கிளர் ஒளிப் பூண் உரவோனை
அண்டர் பிரான் திருவருளால்
    அயல் அறியா மனம் விரும்பப்
பண்டை விதி கடை கூட்டப்
    பரவையாருங் கண்டார்.
142
289
கண் கொள்ளாக் கவின் பொழிந்த
    திருமேனி கதிர் விரிப்ப
விண் கொள்ளாப் பேரொளியான்
    எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
எண் கொள்ளா காதலின் முன்பு
    எய்தாத ஒரு வேட்கை
மண் கொள்ளா நாண் மடம் அச்சம்
    பயிர்ப்பை வலிந்து எழலும்.
143
290
முன்னே வந்து எதிர் தோன்றும்
    முருகனோ? பெருகு ஒளியால்
தன்னேரில் மாரனோ? தார்
    மார்பின் விஞ்சையனோ?
மின் நேர் செஞ் சடை அண்ணல்
    மெய்யருள் பெற்று உடையவனோ?
என்னே என் மனம் திரித்த இவன்
    யாரோ என நினைந்தார்.
144
291
அண்ணல் அவன் தன் மருங்கே
    அளவு இறந்த காதலினால்
உண்ணிறையும் குணம் நான்கும்
    ஒரு புடைச் சாய்ந்தன எனினும்
வண்ண மலர்க் கரும் கூந்தல்
    மடக் கொடியை வலிதாக்கிக்
கண் நுதலைத் தொழும் அன்பே
    கைக் கொண்டு செலவுய்ப்ப.
145
292
பாங்கு ஓடிச் சிலை வளைத்துப்
    படை அநங்கன் விடு பாணம்
தாங்கோலி எம் மருங்கும்
    தடை செய்ய மடவரலும்
தேங்கோதை மலர்க் குழல் மேல்
    சிறை வண்டு கலந்து ஆர்ப்பப்
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற்
    கோயில் போய்ப் புகுந்தான்.
146
293
வன்தொண்டர் அது கண்டு "என்
    மனம் கொண்ட மயில் இயலின்
இன் தொண்டைச் செங்கனி வாய்
    இளங் கொடி தான் யார்" என்ன
அன்றங்கு முன் நின்றார்
    அவர் நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்கும் சேர்வு
    அரியார் எனச் செப்ப.
147
294
"பேர் பரவை பெண்மையினில்
    பெரும் பரவை விரும்பல்குல்
ஆர்பரவை அணி திகழும் மணி
    முறுவல் அரும் பரவை
சீர் பரவை ஆயினாள் திரு
    உருவின் மென் சாயல்
ஏர் பரவை இடைப் பட்ட
    என் ஆசை எழு பரவை".
148
295
என்றினைய பலவும் நினைந்து
    எம்பெருமான் அருள் வகையான்
முன் தொடர்ந்து வருங் காதல்
    முறைமை யினால் தொடக்குண்டு
"நன்று எனை ஆட் கொண்டவர்
    பால் நண்ணுவன்" என்றுள் மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும் போய்த்
    தேவர் பிரான் கோயில் புக.
149
296
பரவையார் வலங் கொண்டு
    பணிந்து ஏத்தி முன்னரே
புரவலனார் கோயிலின் நின்று
    ஒரு மருங்கு புறப்பட்டார்
விரவு பெருங் காதலினால்
    மெல்லியலார் தமை வேண்டி
அரவின் ஆரம் புனைந்தார்
    அடி பணிந்தார் ஆரூரர்.
150
297
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின்
மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து
எவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் எனச்
செவ்வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார்.
151
298
"பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும்
ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர்
தேசின் மன்னி என் சிந்தை மயக்கிய
ஈசனார் அருள் என் நெறிச் சென்றதே".
152
299
"உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்புமாறு அறியேனை நடுக்குற
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று
எம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே".
153
300
"பந்தம் வீடு தரும் பரமன் கழல்
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை
வந்து மால் செய்து மான் எனவே விழித்து
எந்தையார் அருள் எந் நெறிச் சென்றதே.
154
301
என்று சாலவும் ஆற்றலர்" என்னுயிர்
நின்றது எங்கு என நித்திலப் பூண் முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவ ஆசிரியனைச் சேர்ந்த பின்.
155
302
காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்
யாவரோடும் உரையியம்பாது இருந்து
"ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
பூவின் மங்கையைத் தந்து" எனும் போழ்தினில்.
156
303
நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினைக்
காட்டுவன் கடலை கடைந்தது என்ப போல்
பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக.
157
304
எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு
பொய்கையிற் பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கை கண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் புனிப்புற.
158
305
பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் அரன்
அஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்.
159
306
"மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால்
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார்" என்று
நறு மலர்க் கங்குல் நங்கை முன் கொண்ட புன்
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா.
160
307
அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர்
வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல்
பரந்த வெம் பகற்கொல்கிப் பனி மதிக்
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.
161
308
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா.
162
309
வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.
163
310
"தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
வெந்த காமன் வெளியே உருச் செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
எந்தையார் அருள் இவ் வண்ணமோ?" என்பார்.
164
311
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
சாத்தும் வெண் மதி போன்றிலை தண் மதி!
165
312
"அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக்
கடுத்த நஞ்சுன் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய்?"
166
313
"பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச்
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்
புறம் பணைத் தடம் பொங்கழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!"
167
314
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்
தன் அரும் பெறல் நெஞ்சு தயங்கப் போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.
168
315
கனங்கொண்ட மணி கண்டர் கழல் வணங்கிக்
    கணவனை முன் பெறுவாள் போல
இனங் கொண்ட சேடியர்கள் புடை
    சூழ எய்து பெருங் காதலோடும்
தனங் கொண்டு தளர் மருங்குற்
    பரவையும் வன்தொண்டர் பால்
தனித்துச் சென்ற மனங்கொண்டு வரும் பெரிய
    மயல் கொண்டு தன்மணிமாளிகையைச் சார்ந்தாள்.
169
316
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன
    போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்
வேறொருவர் உடன் பேசாள் மெல்ல
    அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
ஏறி மரகதத் தூணத்து இலங்கு மணி
    வேதிகையில் நலங் கொள் பொற் கால்
மாறில் மலர்ச் சேக்கை மிசை மணி
    நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து.
170
317
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை
முகநோக்கி "ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டாரை நாம் வணங்கப்
போம் மறுகெதிர் வந்தவரார்?" என்ன
"இவ்வுலகில் அந்தணராய் இருவர்
தேடொருவர் தாம் எதிர் நின்று ஆண்ட
சைவ முதல் திருத் தொண்டர் தம்பிரான்
தோழனார் நம்பி" என்றாள்.
171
318
என்றவுரை கேட்டலுமே "எம் பிரான்
தமரேயோ" என்னா முன்னம்
வன் தொண்டர் பால் வைத்த மனக்
காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க
நின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன்
நீங்க உயிர் ஒன்றும் தாங்கி
மின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து
மெல் அணை மேல் வீழ்ந்த போது.
172
319
ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி
நீர் நறுந்திவலை அருகு வீசி
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து மடவார்
செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன
மற்று அதன் மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி
மலர் வாளி சொரிந்தான் வந்து.
173
320
மலரமளித் துயில் ஆற்றாள் வரும்
தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்
நிலவுமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும்
பொறை ஆற்றா நீர்மை யோடும்
கலவ மயில் என எழுந்து கருங்
குழலின் பரமாற்றாக் கையள் ஆகி
இலவ இதழ்ச் செந்துவர் வாய் நெகிழ்ந்து
ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்.
174
321
கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்?
கலை வாண் மதியம் கனல்வான் எனை இச்
சந்தின் தழலைப் பனி நீர் அளவித்
தடவுங் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார்
மலையானிலமும் எரியாய் வருமால்
அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான்
அருள் பெற்றுடையார் அருளார்".
175
322
"புலரும் படி யன்றி இரவென்னளவும்;
பொறையும் நிறையும் இறையும் தரியா,
உலரும் தனமும் மனமும் வினையேன்
ஒருவேன் அளவோ? பெரு வாழ்வுரையீர்
பலரும் புரியும் துயர்தான் இதுவோ
படை மன் மதனார் புடை நின்று அகலார்!
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள்
பெற்று உடையார் அவரோ அறியார்.
176
323
"தேரும் கொடியும் மிடையும் மறுகில்
திருவா ரூரிர்! நீரே அல்லால்
ஆரென் துயரம் அறிவார்? அடிகேள்
அடியேன் அயரும் படியோ இதுதான்?
நீரும் பிறையும் பொறிவாள் அரவின்
நிரையும் நிரை வெண்டலையின் புடையே
ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்!
உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்?
177
324
என்றின்னவெ பலவும் புகலும் இருளார்
அளகச் சுருள் ஓதியையும்
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு
அருளுவான் அருளும் வகையார் நினைவார்
சென்று உம்பர்களும் பணியும் செல்வத்
திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்
அன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும்
என்று அடியார் அறியும் படியால் அருளி.
178
325
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ
"மங்கை பரவை தன்னைத் தந்தோம்
இன்னவ்வகை நம் அடியார் அறியும்
படியே உரை செய்தனம்" என்று அருளிப்
பொன்னின் புரி புன் சடையன் விடையன்
பொருமா கரியின் உரிவை புனைவான்
அன்னந் நடையாள் பரவைக்கு "அணியது
ஆரூரன் பால் மணம்" என்று அருள.
179
326
காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற்
கரையில் இருளும் கங்குல் கழி போம்
யாமத்து இருளும் புலரக் கதிரோன்
எழுகாலையில் வந்து அடியார் கூடிச்
சேமத் துணையாம் அவர் பேர் அருளைத்
தொழுதே திரு நாவலர் கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை தகு
நீர்மை யினால் நிகழச் செய்தார்.
180
327
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்
பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார்.
181
328
தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம்
பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும்
மின்னிடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார்.
182
329
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
போதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந் தவிசி இழிந்து தங்கள்
நாதர் பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.
183
330
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்
சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி
இந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற
184
331
கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச்
சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார்
185
332
"நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே" என்றும்
"மேலவர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்பர்" என்றும்
"தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ" என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறு வேறாயம் போற்ற.
186
333
கைக் கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப்பையோர் சூழ
மைக்கருங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார்.
187
334
பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத
இலங்கொளி வலயப் பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல்
நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்
அலங்கலந் தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில்.
188
335
கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
எண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆகப்
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவிச் சென்றார்.
189
336
"அடியவர்க்கு அடியன் ஆவேன்" என்னும் ஆதரவு கூரக்
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார்
கடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும்
படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.
190
337
மன் பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்(து)
அன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரை
நன் பெரும் பரம ஆனந்த நன் மது
என் தரத்தும் அளித்து எதிர் நின்றன.
191
338
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;
காலன் ஆருயிர் மாளக் கருத்தன;
மாலை தாழ் குழல் மாமலையாள் செங்கை
சீலம் ஆக வருடச் சிவந்தன.
192
339
நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;
வேதி யாதவர் தம்மை வேதிப்பன;
சோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய;
ஆதி மால் அயன் காணா அளவின.
193
340
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன;
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன;
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன;
பூத நாத! நின் புண்டரீகப் பதம்.
194
341
இன்னவாறு ஏத்து நம்பிக் கேறு சேவகனார் தாமும்
அந் நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னு சீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப்
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.
195
342
"பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;
அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்" என்று
196
343
நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்" நான் இங்கு
ஏதந் தீர் நெறியைப் பெற்றேன்" என்றெதிர் வணங்கிப் போற்ற
" நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன் மாலை
கோதிலா வாய்மையாலே பா"டென அண்ணல் கூற.
197
344
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
"இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்
பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்" என்ன.
198
345
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன்
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்
" தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று
"எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி" என்றார்.
199
346
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
சென்னியுற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில்
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள
அந் நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார்.
200
347
தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது அன்பு
சேரத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்று
ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார்.
201
348
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகேத்த
எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்.
202
சருக்கம் ஒன்றுக்குத் திருவிருத்தம்
349
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
நம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.
203
திருச்சிற்றம்பலம்
திருமலைச் சருக்கம் முற்றிற்று.

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com